Tuesday, December 27, 2011

ராஜபாட்டை

ராஜபாட்டை ...........................................................................
                         தான் தேர்ந்தெடுக்கும் கதை, கதாபாத்திரத்திற்கு விக்ரம் கொடுக்கும் முக்கியத்துவமும், அதற்காக அவர் காட்டும் ஈடுபாடும் தமிழக ரசிகர்கள் அறிந்தது. அப்படிப்பட்ட விக்ரம் ஜாலியாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்றால், அது 'ராஜபாட்டை' தான். சினிமாவில் எப்படியாவது வில்லனாகிவிட வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் விக்ரம், அதற்காக சினிமாவில் கிடைத்த ஜிம் பாய் வேலையை செய்துகொண்டு தனது வில்லன் லட்சியத்தை நோக்கிய வாழ்க்கையை ஓட்ட, லேண்ட் மாஃபியாவால் பாதிக்கப்பட்ட விஸ்வநாதன், விக்ரமிடத்தில் தஞ்சம் அடைகிறார்.

பொது மக்களின் நிலமோ அல்லது புறம்போக்கு நிலமோ எதுவாக இருந்தாலும், தனக்கு பிடித்துவிட்டால் அதை வளைத்துப் போடும் பெண் அரசியல்வாதியிடம், விஸ்வநாதன் நடத்தி வரும் அனாதை ஆஸ்ரமம் சிக்கி சின்னாபின்னமாகிறது. நல்ல விலைபோகும் அந்த இடத்திற்காக ஒட்டு மொத்த ஆதரவற்ற சிறுவர்களையும் நடுத்தெருவில் நிறுத்தும் அரசியல்வாதியை எதிர்க்கும் விக்ரம், எப்படி அவரை அழித்து இடத்தை மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

முழுக்க முழுக்க கமர்ஷியல் படம்தான் . ஜிம் பாய் வேடம் என்பதால் அதற்கேற்ப உடம்பை தாறுமாறாக ஏற்றிவைத்திருக்கும் விக்ரம், தசாவதாரம் கமலையே மிஞ்சும் அளவுக்கு ஏகப்பட்ட கெட்டப்புகளை இந்தப் படத்தில் போட்டிருக்கிறார்.
தீக்ஷா சேத், ஒரு படத்தில் ஹீரோயினின் தோழி எவ்வளவு காட்சிகளில் வருவாரோ அதை விடவும் குறைவான காட்சிகளில் வந்துபோகிறார். பாடல்களையும் மற்ற மூன்று பேர் பகிர்ந்துகொண்டதால், அதிலும் அம்மணிக்கு வஞ்சகம்தான். இயக்குநர் விஸ்வநாதன், இதுவரை தான் நடித்த கதாபாத்திரங்களை காட்டிலும் இதில் கொஞ்சம் வித்தியாசமான வேடம்தான். காமெடி களத்திலும் இவரை கலக்க வைக்கலாம் என்று நினைத்த இயக்குநர் திருப்தி அடைந்திருந்தாலும், ரசிகர்கள் என்னவோ ஏமாற்றம்தான் அடைந்திருக்கிறார்கள்.

'அக்கா' என்ற அரசியல் தாதவாக வரும் நடிகை சனா, வில்லியாக ரசிகர்களை கவர்கிறாரோ இல்லையோ அழகனா ஆண்டியாக ரொம்பவே ரசிகர்களை கவர்ந்துவிட்டார். தம்பி ராமையா, அவினாஸ், பிரதீப் ரவத் என அத்தனை கதாபாத்திரங்களும் ஏதோ மழைக்கு ஒதுங்கியதுபோல அவ்வப்போது தோன்றி மறைகிறார்கள்.

 மதியின் ஒளிப்பதிவு ஓகோ! என்று பாராட்டும் அளவுக்கு இல்லையென்றாலும். ஒகே என்று சொல்லலாம்.

சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு மற்றும் படத்தொகுப்பாளர் காசிவிஸ்வநாதன் இருவரும் மொத்தப் படத்தையும் தூக்கி சுமந்திருக்கிறார்கள். இவர்களுடைய பணி படத்தில் பளிச்சென்று தெரிகிறது. படத்தை கொஞ்சம் ரசிக்க முடிகிறது என்றால் அது இவர்களுக்காகத்தான் இருக்கும்.
சும்மாவே பாடல்களுக்கு வெளியே எழுந்து செல்லும் ரசிகர்கள், க்ளைமாக்ஸ் முடிந்தவுடன் பாடலை போட்டால் கேட்கவாப் போகிறார்கள். ரீமே சென், ஸ்ரேயா ஆகியோர் இடம்பெறும் பாடலுக்கு இந்த நிலையைத்தான் உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள் ராஜபாட்டை குழுவினர்.

சீனு என்ற இணை இயக்குநரின் கதைக்கு, திரைக்கதை அமைத்து சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். பிறருடைய கதை என்பதால் ஒரு வட்டத்திற்குள்ளே சுசீந்திரன் சுழன்றிருப்பது நன்றாகவே தெரிகிறது. அதனால்தான் சுசீந்திரனின் முந்தைய படங்களில் இருந்த விறுவிறுப்பு இதில் இல்லை .

சீரியஸான கதைக்கு, ஜாலியான திரைக்கதை அமைக்கப்பட்டதே படத்தின் பலவீனமாகும். மொத்தத்தில் ராஜபாட்டை என்ற தலைப்புக்காக உருவாக்கப்பட்ட திரைக்கதை போலத்தான் இருக்கிறது.........
             

2 comments:

Anonymous said...

எல்லாம் நல்லாயிருக்கு ஆனால் சரக்கு பத்தலை, இன்னும் வேணும் தம்பி.

தஞ்சை குமணன் said...

nalla than irukku enakkum en palaya gnabagam vandhadhu different characters kuda konjam iyarkai kalandhu nadichadhu nalladhu thane

Post a Comment