பர்சனல் லோன், வீட்டு லோன், வண்டி லோன் என தனியார் வங்கிகள் தானே வந்து கொடுக்கும் கடனை வாங்கிவிட்டு, பிறகு அந்த கடனின் வட்டியையும் அதுபோட்ட குட்டியையும் கட்டி கந்தலாகிப்போன மக்களுக்காக எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் 'மகான் கணக்கு.'
அக்காவின் ஆதரவில் ரமணா எம்.பி.ஏ படித்து வருகிறார். ரமணாவின் மேல் படிப்பிற்காகவும், வெளிநாடு சென்று பயிற்சிப் பெறுவதற்காகவும் அவருடைய அக்காவின் கணவர் தனியார் வங்கி ஒன்றில் ரூ.2 லட்சம் பர்சனல் லோன் வாங்குகிறார். நாளடைவில் அந்த லோனையும் கட்டி முடித்து விடுகிறார். இருந்தாலும் லேட் பீஸ், பெனால்ட்டி என்று ஏதோ சொல்லி இன்னும் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்று வங்கி நிர்வாகம் சொல்கிறது. இந்த பணத்தை வசூலிப்பதற்காக வங்கி ஆட்கள் இரவு பகல், வேலை பார்க்கும் இடம் என்று அனைத்து இடத்திலும் வந்து ரமணாவின் அக்கா கணவருக்கு டார்ச்சர் கொடுக்க, ஒரு கட்டத்தில் அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கு சென்று, அங்கு இருப்பவர்கள் முன்னாடி அவர்களை கீழ்த்தரமாக பேசுகிறார்கள்.
இதனால் மனம் உடைந்துப்போகும் அவர்கள் தங்களது ஐந்து வயது குழந்தையுடன் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்கிறர்கள். தனது அக்கா குடும்பத்தின் தற்கொலைக்கு வங்கிதான் காரணம் என்ற உண்மையை தெரிந்து கொண்ட ரமணா, என்ன செய்கிறார் என்பதே கதை.வழக்கமான காதல் கதை, பழிவாங்கும் கதை என்றெல்லாம் இல்லாமல் சமூக அக்கறையுடன் ஒரு வித்தியாசமான சப்ஜக்ட்டை தனது முதல் படமாக எடுத்திருக்கும் இயக்குநர் சம்பத் ஆறுமுகத்தை பாராட்டியாக வேண்டும். படம் ஆரம்பத்தில் அப்படி இப்படி என்று நகர்ந்தாலும், அக்கா கணவர் கடன் வாங்கியப் பிறகு வரும் காட்சிகள் வேகத்தில் படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது.நீண்ட நாட்களாக ஜெயிக்க போராடி வரும் ரமணா, இந்த கதைக்கு மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தனது அக்காவின் குடும்பம் தற்கொலை செய்துகொண்ட பிறகு வரும் காட்சிகள், காதல் காட்சிகள் என அத்தனையிலும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்.
ஹீரோயினைக் காட்டிலும் அவருக்கு தோழியாக வருபவர்கள் ரசிக்கும்படி இருக்கிறார்கள். ரமணாவின் அக்காவின் பெண்ணாக நடித்திருக்கும் சிறுமியும் அவர் பங்குக்கு அசத்தியிருக்கிறார். ரமணாவின் அக்காவாக நடித்திருக்கும் தேவதர்ஷினியும், அவருடைய கணவராக வரும் ஸ்ரீநாத்தும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பத்தில் சாங்கியத்திற்காக சில காதல் காட்சிகள் இருந்தாலும், ஆங்காங்கே சில லாஜிக் மீறல் விஷயங்கள் இருந்தாலும், இரண்டாம் பாதியில் காதல் காட்சிகள், பாடல் என்று இல்லாமல் இயக்குநர் சொல்ல வந்த கருத்தை மட்டுமே சொல்லியிருக்கிறார். மேலும் தனியார் வங்கிகளில் நடக்கும் சில முறைகேடுகளை தைரியமாக சொல்லியிருக்கும் இயக்குநருக்கு சபாஷ் சொல்லலாம்.இப்படி சமூக அக்கறையுடன் பொதுவான கருத்தை கதை களமாக படமாக்கியிருக்கும் இயக்குநர், படம் முடிந்தவுடன் ஒரு குறிப்பிட்ட சாராரின் ஆதரவு பெற்ற அன்னா ஹசாராவின் உண்ணாவிரத காட்சிகளை ஏன் காண்பித்தார் என்றுதான் புரியவில்லை.
எது எப்படியோ 'மகான் கணக்கு' அனைத்து தரப்பு மக்களும் பார்க்க வேண்டிய படம்.............
விரைவில் சந்திப்போம் .........காங்கேயன்
0 comments:
Post a Comment